வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
விடா முயற்சி: ஆயிரம் மடங்கு அப்செட் ஆன அஜித்; ரிலீஸ் தள்ளிப்போனதன் பின்னணியில் நடந்தது இதுதான்!
இந்தப் புத்தாண்டு 'விடா முயற்சி'யின் டிரெய்லரோடு விடியும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக லைகா ஒன்றை அறிவித்தது. 'சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடா முயற்சி' திரைபப்டம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது.' என அறிவித்தது. இப்படி ஒரு அறிவிப்பைக் கண்டு, அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். இது குறித்து சமூக வலைதளத்தில் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'விடா முயற்சி' இதில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா கஸான்ட்ரா, அர்ஜூன், ஆரவ், நிகில் நாயர், ரம்யா சுப்ரமணியன் என பலரும் நடித்துள்ளனர். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் ரிலீஸ் என்பதால் முதல் சிங்கிளான 'சவதீகா' பாடல் வெளியானது. இது சமீபத்தில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடலாகும். ஆண்டனி தாசன் பாடியுள்ள இப்பாடலை அறிவு எழுதியிருந்தார். புத்தாண்டு ஸ்பெஷலாகப் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டது குறித்த தகவல் வெளியானது. இது குறித்து பல்வேறு தரப்பினரிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் இனி..
''ரொம்பவே இக்கட்டான ஒரு சூழலால் தான் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டிருந்தது. சினிமாவின் வியாபாரம் என்பது இன்றைய காலகட்டத்தில் உலகளாவியது. இங்கே பொங்கலுக்கு படம் திரைக்கு வர வேண்டுமென்றால், அதே தினத்தில் வெளிநாட்டிலும் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்றால் பல கட்ட பிராசஸ் இருக்கின்றன. வெளிநாடுகளில் ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்னரே, அதாவது 15 நாட்களுக்கு முன்னரே படம் சென்ஸார் ஆகியிருக்க வேண்டும். தவிர, 'விடா முயற்சி' பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கியிருப்பதாலும், சென்ஸாருக்கு முன்னர் 'பேப்பர் ஒர்க்ஸ்' சமர்ப்பித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் தயாரிப்பு தரப்பில் அதற்கு கால அவகாசம் இருக்கிறது என்ற எண்ணத்தில் அங்கே கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்கள் வருவதை கணிக்கத் தவறி விட்டனர். வெளிநாடுகளில் அந்த சமயங்களில் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டு விடும் என்பதால், பேப்பர் ஒர்க்ஸ் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. படத்தை இந்தியாவில் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதே சமயம், இங்கே மட்டும் ரிலீஸ் செய்ய முடியாது அல்லவா!. எனவே ரிலீஸை பிற்போட வேண்டியதாகிவிட்டது.
இதில் ரசிகர்களை விட கடும் அப்செட் ஆனது அஜித் தான் என்கிறார்கள். 'விடாமுயற்சி'யின் ஒரு பாடலை படமாக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் அவரை படப்பிடிப்புக்கு அழைத்த போது, அவர் 'குட் பேட் அக்லி'யின் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அங்கே தினமும் தொடர்ந்து 14 மணி நேர படப்பிடிப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த சமயம் 'விடா முயற்சி'க்கு கேட்ட தேதிகளில் அவருக்கு கடுமையான காய்ச்சல் வேறு இருந்திருக்கிறது. ஆனாலும் பொங்கலுக்கு படத்தை வெளியிடலாம் என்று முடிவானதால், அதனை அஜித்தும் விரும்பியவர், காய்ச்சலையும் பொருட்படுத்தாமல், படப்பிடிப்பில் பங்கேற்று முடித்துக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கல்யாண் மாஸ்டர் அளித்த பேட்டியில் கூட, அஜித்தின் காய்ச்சல் குறித்து பேசியிருப்பார். பொங்கல் அன்று படம் திரைக்கு வர வேண்டும் என தயாரிப்பு தரப்பிடம் நேரடியாக அவர் பேச வில்லை என்றாலும், அவரது சார்பில் படம் வெளிவருவதற்கான முயற்சியில் இருந்தார். படம் திரைக்கு வராமல் போனதில், அஜித்திற்கு பெரும் அப்செட். ரசிகர்களை விட ஆயிரம் மடங்கு அவர் அப்செட் ஆனார் என்று. டிரெய்லரையும் அதனால் தான் வெளியிட முடியாமல் செய்தனர். அடுத்த மாதத்திற்குள் படத்தை ரிலீஸுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர். பொங்கலுக்கு ரிலீஸ் தேதி மற்றும் டிரெய்லர் வெளியாகும்'' என்கின்றனர்.