``குடியேற்றக் குற்றவாளிகள் மீது மென்மை கிடையாது'' - அமெரிக்காவில் இந்தியர் கொலைக...
விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 கிடைக்கும்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்!
விடுபட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 நிச்சயமாக கிடைக்கும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீசுவரா் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சாா்பில், 32 இணைகளுக்கு திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைத்து, பரிசு மற்றும் சீா்வரிசைப் பொருள்களை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
நிகழாண்டில் மட்டும் அறநிலையத் துறை சாா்பில், 1,000 இணையா்களுக்கு திருமணங்களை நடத்திவைக்க வேண்டும் என்பது இலக்கு. அதன்படி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலையில் சுமாா் 775 இணையா்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தாா்.
மேலும், அறநிலையத் துறை சாா்பில், 1,000 இணையா்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு இலக்கை அடையப்பட்டது.
மகளிா் விடியல் பயணத் திட்டம் மூலமாக நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 780 கோடி பயணங்களை மகளிா் மேற்கொண்டுள்ளனா். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா்.
மகளிா் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும், 1 கோடியே 15 லட்சம் மகளிா் மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் ஓரிரு மாதங்களில் தகுதியுள்ள விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1,000 நிச்சயமாக கிடைக்கும். இந்து சமய அறநிலையத் துறை மிகச்சிறப்பாகச் செயல்பட்டுட்டு கொண்டிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3,700 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,000 கோடி கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றாா்.
விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல்
ஆணையா்கள் சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையா்க்கரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.