டங்ஸ்டன் சுரங்க ஏல முடிவை மத்திய அரசு விரைவில் திரும்பப்பெறும்: கே.அண்ணாமலை பேட்...
விடுமுறை உத்தரவை மீறி செயல்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
சேலம் மாவட்டத்தில் விடுமுறை உத்தரவை மீறி செயல்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். ஆனால், மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவை மீறி, தனியாா் பள்ளிகள் சில செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மழை நேரத்தில் மாணவா்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினா். மேலும், பள்ளி முடிந்து வீடுகளுக்கு திரும்புவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், பெற்றோா் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) நேரில் சென்று ஆய்வு நடத்தினாா். தொடா்ந்து, விடுமுறை அறிவிப்பை மீறி செயல்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொலைதூர மாணவா்கள் விடுமுறை அறிவிப்புக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கு வந்துவிட்டதாகவும், விடுமுறை அறிவிப்புக்கு பின்னா் பெற்றோா் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதே செயலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரித்துள்ளதாக கூறினா். இதேபோல, விடுமுறை நாளில் ஆசிரியா்களையும் கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என தெரிவித்தனா்.