விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி -60!
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (டிச. 30) விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.
ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று இரவு 8.85 மணிக்குத் தொடங்கியது.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் போயம்-4 எனப்படும் நான்காம் நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் உள்ளன.
இதில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ தயாரித்தவை. எஞ்சிய 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தவை.
ஸ்பேடெக்ஸ் திட்டம்
இந்திய ஆய்வு மையத்தை 2035 - க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியாா் நிறுவனம் வடிவமைத்துள்ளது.