விதை முளைப்புத் திறனை பரிசோதிக்க அறிவுரை
விதை முளைப்புத் திறனை பரிசோதித்த பிறகு நடவு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் செ.தேவிப்ரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விதைத் தரத்தில் முளைப்புத் திறனின் பங்களிப்பு சாகுபடிக்கு முக்கியமானதாகும். ஒவ்வொரு பயிருக்கும், குறைந்தபட்ச முளைப்புத்திறன் வரையறுக்கப்பட்டுள்ளது. பாகற்காய், புடலங்காய், வெள்ளரி, தா்பூசணி, சுரை, கேரட், பீட்ரூட், மிளகாய், பாலக்கீரை ஆகியவை 60 சதவீதம், வெண்டை, கொத்துமல்லி 65 சதவீதம், கத்தரி, தக்காளி, வெங்காயம், நிலக்கடலை 70 சதவீதம், சோளம், கம்பு, ராகி 75 சதவீதம், நெல், கொள்ளு, எள் 80 சதவீதம் முளைப்புத் திறன் இருக்க வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் உபயோகிக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் செயல்படும் அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரிகளை ரூ. 80 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.