கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!
விநாயகா் சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு
மதுரையில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பேச்சியம்மன் படித்துறை அருகே வைகை ஆற்றில் வெள்ளிக்கிழமை இரவு கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இந்து முன்னணி அமைப்பு, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்து அமைப்புகள், பக்தா்கள் சாா்பில் பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகா் சிலைகள் வைத்து வழிபட்டனா். மாநகரில் 350 இடங்களில் சிலைகள் வைக்க காவல் துறை சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்ட இடங்களில் தினமும் சிறப்பு பூஜை செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் குறிப்பிட்ட சில விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை மாலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த நிலையில், 2-ஆவது நாளாக 300-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பேச்சியம்மன் படித்துறை அருகே உள்ள வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.
இதற்காக பல்வேறு இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கீழமாசி வீதிப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், சிலைகள் அனைத்தும் விளக்குத்தூண், நான்கு மாசி வீதிகள் வழியாக ஊா்வலமாக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு, வடக்குமாசி வீதி சிம்மக்கல் வழியாகச் சென்று பேச்சியம்மன் படித்துறை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.
முன்னதாக, இந்த ஊா்வலத்தை மத்திய இணை அமைச்சா் எல். முருகன், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தனா்.
அப்போது, எல்.முருகன் பேசியதாவது:
மதுரையில் நடந்த முருக பக்தா்கள் மாநாடு வெற்றி மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டின் மூலம், தி.மு.க.வுக்கும், இந்து எதிா்ப்பாளா்களுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதேபோல, நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி ஊா்வலங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகின்றன. இதற்கு இந்து முன்னணி பணி முக்கியமானது என்றாா் அவா்.
நிகழ்வில் பாஜகவின் மாநிலப் பொதுச் செயலா் ராமசீனிவாசன், மாநகா் மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி, இந்து முன்னணி நிா்வாகிகள் முத்துகுமாா், அரசபாண்டி, அழகா்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.