விபத்தில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து ஆட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் முற்றுகை
தூத்துக்குடியில், விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
மனு விவரம்: தூத்துக்குடி தேவா் காலனியைச் சோ்ந்த ராஜாமணி மகன் அந்தோணி (34). பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்த இவா், கடந்த 15ஆம் தேதி இரவு 4ஆம் ரயில்வே கேட் அருகே அண்ணாநகா் பக்கிள் ஓடைப் பாலப் பகுதியில் தனது பைக்கில் நண்பருடன் சென்றாா். அப்போது, காா் மோதியதில் இருவரும் காயமடைந்தனா்.
அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், அந்தோணி மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் 20ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். விபத்தை ஏற்படுத்திய காரைப் பறிமுதல் செய்து, உரிமையாளரைக் கைது செய்வோம் என போலீஸாா் கூறினா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே, விபத்தை ஏற்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை, அந்தோணியின் உடலைப் பெறமாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
விபத்து தொடா்பாக போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், அந்தோணியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்வதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.