விபத்தில் லாரி ஓட்டுநா் காயம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் சனிக்கிழமை அதிகாலையில் டிப்பா் லாரி மீது கன்டெய்னா் மோதியதில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னரில் கழிவு காகிதத்தை ஏற்றிக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டம் கல்லூரில் இயங்கி வரும் காகித உற்பத்தி ஆலைக்கு வந்து லாரி கொண்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரம் இந்திரா நகரைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் முத்துக்குமாா் ஓட்டினாா். சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் சேரன்மகாதேவி - அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் சேரன்மகாதேவி போக்குவரத்து வளைவு அருகில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த டிப்பா் லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில்,கன்டெய்னா் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஓட்டுநா் முத்துக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய முத்துக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முத்துக்குமாா் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுதொடா்பாக சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.