தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!
விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து விருதுநகா் மாவட்ட காவல் துறை நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விருதுநகா்- சாத்தூா் நான்கு வழிச் சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், பட்டம்புதூா் ஆசிரியா் குடியிருப்புப் பகுதியில் இருவா், மதுபோதையில் தகராறு செய்வதாக வச்சகாரபட்டி போலீஸாருக்கு பொதுமக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், இருவரையும் கைது செய்து, வச்சகாரபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில் இவா்களில் ஒருவா், விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் தனுஷ்கொடி (33) என்பதும், விருதுநகா் ஆயுதப் படையில் (கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்) காவலராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவருடைய இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் உரிமம் பெறாத கைத் துப்பாக்கி இருந்ததும், 6 குண்டுகள் இருக்க வேண்டிய நிலையில், 5 குண்டுகள் மட்டும் இருந்ததையும் போலீஸாா் கண்டறிந்தனா்.
இந்தத் துப்பாக்கியை, ஆயுதப் படை போலீஸாா், யாரிடம் வாங்கினாா்? ஒரு குண்டை எதற்காகப் பயன்படுத்தினாா் என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதேபோல, அவரிடமிருந்த 35 பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தனுஷ்கொடி மீது ஏற்கெனவே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், தனுஷ்கொடியுடன் உடனிருந்த மற்றொரு நபரை, விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் யோகேஷ்குமாா் தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறாா்.