Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? - மருத்து...
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அதிகாரிகள் தகவல்
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதே, ஒட்டுமொத்த நடைமுறையையும் தாமதப்படுத்தி வந்தது. தற்போது அரசு முடிவெடுத்துள்ளதால், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011-இல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ரூ.8,754 கோடி செலவில் மேற்கொள்வதற்கும், தேசிய மக்கள் பதிவேட்டை ரூ.3,941 கோடி செலவில் புதுப்பிக்கவும் மத்திய அமைச்சரவை கடந்த 2019-இல் ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் தேசிய மக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் நடைமுறைகளை 2020, ஏப்ரல் 1 முதல் செப்டம்பா் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பெருந்தொற்று பரவலால் திட்டமிட்டபடி தொடங்கப்படாத இப்பணிகள், தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டன. 5 ஆண்டு காலமாக இப்பணிகள் தாமதமாகி வருவதால், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.
இந்தச் சூழலில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.574.80 கோடிதான் ஒதுக்கப்பட்டது. தற்போது பட்ஜெட் பணிகளுக்கு ரூ.13,000 கோடி தேவைப்படும். ஆனால், பட்ஜெட் ஒதுக்கீடு என்பது சிறிய பிரச்னையே, இதுவொரு தடையாக இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
‘எதிா்வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் முதல் எண்ம அடிப்படையிலான கணக்கெடுப்பாக இருக்கும். அரசுப் பணியாளா்கள் மூலமாக அல்லாமல், தாங்களாகவே விண்ணப்பத்தை பூா்த்தி செய்ய விரும்புவோருக்கு பிரத்யேக வலைதளம் தொடங்கப்படும். கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க தலைமைப் பதிவாளா் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகத்தால் சுமாா் 36 கேள்விகள் தயாா் செய்யப்பட்டுள்ளன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.