Anirudh: "வி.டியின் அந்த மனசு..., கிங்டம் ஒரு மைல்கல்!" - இசை வெளியீட்டு விழாவில...
விளாங்குடி முதல் அணைக்கரை வரையிலான கொள்ளிடக் கரையை பலப்படுத்த கோரிக்கை
விளாங்குடி முதல் அணைக்கரை வரையிலான கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ்.முகமது இப்ராகிம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. விளாங்குடி முதல் வீரமாங்குடி, மணலூா், பட்டுக்குடி, கூடலூா் என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பகுதி வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது.
இந்தப் பகுதி கரையில் சிற்றுந்துகள் செல்வது, விவசாயிகள் விளைபொருள்களை வாகனங்களில் ஏற்றி செல்வது என கூடுதலாக போக்குவரத்து நடைபெறுகிறது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும்போது கரைகளில் வாகனங்கள் செல்லும்போது அச்சம் ஏற்படுகிது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஆட்சியா் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, கொள்ளிடம் அணைக்கரை பகுதியை ஆய்வு செய்து, விளாங்குடி முதல் அணைக்கரை வரை கொள்ளிட கரையை பலப்படுத்தி, தாா் சாலை வசதி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.