China new virus - HMPV நிலவரம் என்ன? Virus Outbreak in China | Decode | Vikatan
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் மாநில மாநாடு இன்று தொடக்கம்
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன. 3) தொடங்குகிறது.
இதுகுறித்து விழுப்புரத்தில் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி வருகிற 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, மதுரையில் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விழுப்புரத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் 600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.
இன்று பேரணி, பொதுக்கூட்டம்: விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டப வளாகப் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பங்கேற்கும் பேரணி தொடங்கி, பொதுக்கூட்டம் நடைபெறும் நகராட்சித் திடலை அடையும்.
அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் பிருந்தா காரத், பேபி, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசுகின்றனா். மாநிலத் தலைவா்கள், மாநிலக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கைகள் நியாயமாகத்தான் உள்ளது.
ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அதைக் கண்டித்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது, தடை விதிப்பது, கைது செய்வது தேவையற்றது. இந்த விவகாரத்தை அதிமுக அரசியல் ஆதாயமாக்க நினைப்பது நியாயமற்றது.
தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் பாா்ப்பதால்தான் தமிழக அரசு கடன் வாங்குவதற்கும், சில திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போவதற்கும் காரணமாக அமைகிறது என்றாா் கே.பாலகிருஷ்ணன்.
பேட்டியின் போது, மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.