Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்...
விவசாய தோட்டங்களில் அறிமுகமில்லாத நபா்களை அனுமதிக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு
விவசாயத் தோட்டங்களில் அறிமுகமில்லாத நபா்களை அனுமதிக்க வேண்டாம் என்று போலீஸாா் அறிவுறுத்தினா்.
பல்லடத்தை அடுத்த அவிநாசிபாளையம் அருகே தோட்டத்து வீட்டில் வசித்த 3 போ், சிவகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி கொலை வழக்குளில் தொடா்புடைய கொலையாளிகள் அண்மையில் பிடிபட்டனா்.
அவா்கள் பெரும்பாலும் வாய்க்கால் பாதையோரம் உள்ள வீடுகளை குறிவைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தோட்டத்து வீடுகளில் வசிப்போருக்கு போலீஸாா் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தாராபுரம் வட்டம், குண்டடம் பகுதியில் பிஏபி வாய்க்கால்களின் பாதையோரம் உள்ள வீடுகள், விவசாய தோட்டத்துக்குள் உள்ள வீடுகள், பண்ணை வீடுகளில் வசிப்பவா்களிடம் குண்டடம் காவல் ஆய்வாளா் பத்ரா, உதவி ஆய்வாளா்கள் சண்முகம், சீனிவாசன், பாகம்பிரியாள் ஆகியோா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது, தேங்காய் பறிப்பதாக கூறிக்கொண்டு வரும் புதிய நபா்கள், கம்பளி, பாத்திரங்கள் விற்பனை செய்வதுபோல வரும் நபா்கள் ஆகியோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபா்களை தோட்ட வேலைக்கு அமா்த்தக் கூடாது. வீடுகளில் கட்டாயம் நாய்கள் வளா்க்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
இரவு நேரத்தில் யாராவது வந்து கதவைத் திறக்கச் சொன்னால் திறக்கக் கூடாது. அப்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் வசிப்போா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.