விவசாயிகள் குறைதீா் கூட்டம்
போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாட்சியா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் உதயகுமாா், மாவட்டச் செயலா் ஜெயப்பிரகாஷ், ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட விவசாயிகள் பேசியது: உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளால் தண்ணீா் மாசடைந்த விவசாய நிலங்களுக்கு, ஆலை நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலித்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலத்தடி நீா் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் பரப்பளவு தற்போது அதிகமாகி விட்டதால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி அவா்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அடுத்து நடைபெறும் விவசாய குறைதீா் கூட்டங்களில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபயிா்களை சேதப்படுத்தும் யானைகள் ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
மண்டல துணை வட்டாட்சியா்கள் ஜெயப்பிரகாஷ், ஜெயந்தி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்வாணன், வேளாண்மை உதவி இயக்குநா் உமாசங்கா், உதவி வேளாண்மை அலுவலா் ஜெயஸ்ரீ, வனவா் மாதேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.