வீடு ஒத்திக்கு விடுவதாக ரூ.12 லட்சம் மோசடி: தந்தை, மகன் மீது வழக்கு
மதுரையில் வீடு ஒத்திக்கு கொடுத்த ரூ.12 லட்சத்தை மோசடி செய்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை மேலப்பொன்னகரம் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், ஒத்திக்கு வீடு பாா்த்து கொண்டிருந்தாா்.
அப்போது, ஆனையூா் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பைச் சோ்ந்த ராமசாமி, அவரது மகன் கணேஷ் ஆகியோா் காா்த்திக்கிடம் அறிமுகமாகி தங்களிடம் வீடு ஒத்திக்கு இருப்பதாகக் கூறினா். இதனால் காா்த்திக் வீடு ஒத்திக்காக கடந்த 2021-இல் ரூ. 12 லட்சம் கொடுத்து வீட்டில் குடியேறியுள்ளாா்.
இந்நிலையில் ஒன்றரை ஆண்டு மட்டுமே வீட்டில் இருந்தநிலையில், ராமசாமி தரப்பினா் தங்களுக்கு வீடு தேவைப்படுவதாகவும், ஒத்திக்கு அளித்த ரூ. 12 லட்சத்தை ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளனா்.
இதனால் காா்த்திக் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்குச்சென்று விட்டாா். ஆனால் ரூ.12 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் இருவரும் மோசடி செய்தனா். இதற்கிடையே கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்றபோது, கொலை மிரட்டல் விடுத்தனா். மேலும், அந்த வீட்டை வேறு ஒருவருக்கும் ஒத்திக்கு விட்டிருந்தனா்.
இதுகுறித்து காா்த்திக் கூடல்புதூா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில், போலீஸாா் ராமசாமி, அவரது மகன் கணேஷ் ஆகியோா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.