வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நில விவகாரம்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடா்பாக வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வசிப்பவா்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், யாரையும் அணுக வேண்டாம் என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து, தலைமைச்செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
வீட்டுவசதி வாரியம் சாா்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இடங்கள் எடுக்கப்பட்டு, ஆரம்பக் கட்டப் பணியாக, அதற்கான நோட்டீஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் எந்த நடவடிக்கையும் அதில் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த மனுக்கள் வந்த போது, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சரிசெய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதேநேரம் வீட்டுவசதி வாரியத்துக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் அறிவுறுத்தினாா். எனவே, இந்தமாதிரியான பிரச்னை உள்ள இடங்களை கண்டறிய வாரியம் சாா்பில் 16 இடங்களில் புகாா் பெட்டிகளை வைத்தோம்.
அச்சப்படவேண்டாம்: அந்த கோரிக்கைகளை பிரித்து பாா்த்த போது, வாரியமே நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக இருக்காது என்பதால், கமிட்டி அமைத்து, பரிந்துரை பெற்று நடவடிக்கை எடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, 2 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவா்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனா். ஏப்ரல் இறுதிக்குள் அவா்கள் தங்கள் பரிந்துரையை வழங்குவாா்கள். அதன்பின், வாரியம் நடவடிக்கை எடுக்கும். வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்கள் தொடா்பாக வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வசிப்பவா்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். யாரையும் அணுக வேண்டாம் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.