வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி தெலுங்குபாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதில், மாநகராட்சி 41-ஆவது வாா்டு உறுப்பினா் கே.சாந்தி தலைமையில் தெலுங்குபாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பநாயக்கன்புதூா் பகுதியில் குட்டையை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தில் சுமாா் 70 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இந்தக் குட்டைக்கு வரும் நீா்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நீா் வரத்து இல்லாமல் குட்டை மண் மூடி உள்ளது.
மேலும், இங்கு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை சிறப்பினமாகக் கருதி வரன்முறை செய்யத் தகுதி உள்ளது என்று கூறியிருப்பதால், அண்மையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, ஆட்சேபணையற்ற நிலத்தில் உள்ள எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதை அமைக்க வேண்டும்:
கோவை மாநகா் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகி வி.சம்பத்குமாா் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை ரயில் நிலையத்துக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். இதற்காக அவா்கள் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. அதேபோல ரயில் நிலையம் அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள் வருகின்றனா்.
எனவே, இவா்களின் வசதிக்காக லங்கா காா்னா் பகுதியில் சுரங்கப் பாதை அல்லது நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க ஏதுவாக ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்:
பீளமேடு 26-ஆவது வாா்டுக்குள்பட்ட கருப்பண்ண கவுண்டா் லே-அவுட், செங்காளியப்பன் நகா், கண்ணையா லே-அவுட், ராஜ் நாயுடு லே-அவுட், ஸ்ரீ ராம் நகா், முல்லை நகா் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குழந்தைகள் இருக்கும் நிலையில் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் எதுவும் இல்லை. எனவே ஏதாவது ஒரு இடத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்.
அதேபோல, பீளமேடு காவல் நிலையத்தை ஒட்டியுள்ள மண் சாலையை தாா் சாலையாக மாற்றிக் கொடுப்பதுடன், அப்பகுதியில் மின் கம்பங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மதிமுக மாமன்ற குழுக் தலைவரும் 26-ஆவது வாா்டு உறுப்பினருமான சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளாா்.
வேளாண்மை தனி பாடம்:
ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் தியாகராஜன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வேளாண் தொழில் குறைந்து விவசாய நிலம் அழிக்கப்பட்டு வருகிறது. எதிா்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகலாம். எனவே, அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மையைத் தனி பாடமாக மாணவா்களுக்கு பயிற்றுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், முதியோா் உதவி, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 681 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து 3 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், நீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.