வெங்காயத்தின் மீதான 20% ஏற்றுமதி வரி நீக்கம்: சிவராஜ் சிங் சௌகான்
புதுதில்லி: ஏப்ரல் 1 முதல் வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவிகித சுங்க வரியை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்றார் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.
இனி வெங்காய ஏற்றுமதிக்கு எந்த வரியும் இருக்காது. விவசாயிகளின் கடின உழைப்பில் பயிரிடப்பட்ட வெங்காயம் உலகளாவிய சந்தைகளை அடையும் போது, சிறந்த விலை கிடைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஏற்றுமதி வரி 40 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், வெங்காய விலை குறையத் தொடங்கியதும், விவசாயிகளுக்கு வருமானம் சரிந்ததையடுத்து, ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், தற்போது 20 சதவிகித ஏற்றுமதி வரியையும் முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
நிதி அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஏற்றுமதி வரி திரும்பப் பெறுதல் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்றுமதி வரி நீக்கம் உள்நாட்டு விவசாயிகளை வெங்காய விலை செங்குத்தான வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: எஃப்.ஐ.ஐ முதலீடுகளால், 6வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!