வெடித்த வன்கொடுமை விவகாரம்; தலைமறைவான திமுக இளைஞரணி நிர்வாகி - பதவியைப் பறித்த உதயநிதி
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகித்துவந்தார். இந்த நிலையில், அரக்கோணம் அருகிலுள்ள 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், டி.ஜி.பி அலுவலகம் வரை சென்று தெய்வச்செயல் மீது கொடுத்திருக்கும் வன்கொடுமைப் புகார் அரக்கோணத்தையே அதிர வைத்திருக்கிறது. தனது புகார் மனுவில், திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்து சித்ரவதை, கொலை மிரட்டல் என தெய்வா மீது புகார்களை அடுக்கியிருக்கிறார் அந்த மாணவி.
25 வயதான மேலும் ஒருப் பெண்ணும், தன்னை 5 ஆண்டுகளாக தெய்வச்செயல் ஏமாற்றிவந்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தெய்வச்செயலின் கட்சிப் பதவியை பறித்து ஓரங்கட்டியிருக்கிறார் துணை முதலமைச்சரும் தி.மு.க-வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பெயரில் வெளியாகியிருக்கும் அறிவிப்பில், ``அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞரணித் துணை அமைப்பாளர் தெய்வா என்கிற தெய்வச்செயல், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக காவனூர் பள்ளிக்கூடத் தெருவைச்சேர்ந்த கவியரசு என்பவர் அப்பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.