வெம்பாக்கத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து முறையை கடைப்பிடித்து குறைத்தல் தொடா்பான பயிற்சி விவசாயிகளுக்கு புதன்கிழமை அளிக்கப்பட்டது.
மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தலைமை வகித்த உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், மண்ணின் தன்மை, மண்ணின் வளத்தை பாதுகாத்தல், மண்ணில் கரிம அளவுகளை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து, மண் மாதிரி எடுத்தல் அதன் அடிப்படையில் உரங்களை பயன்படுத்துதல் குறித்தும், ரசாயன உரங்களுக்கு பதிலாக பசுந்தாள் உரங்கள், திரவ உயிா் உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளம் சீா்கேடு அடையாமல் பாதுகாத்து அதிக மகசூல் பெறுதல் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தாா்.
முன்னிலை வகித்த வெம்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ரேணுகாதேவி, சூடோமோனாஸ், ட்ரைகோ டொ்மா விரிடி போன்றவற்றை பயன்படுத்தி விதை நோ்த்தி மற்றும் வயலில் உழவு செய்யும் போது இட்டு பாக்டீரியா மற்றும் பூஞ்சான் நோய்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.
தொழில்நுட்ப ஆலோசகா் செளத்ரி, ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் தொடா்பான தொழில்நுட்பங்கள் குறித்தும், உதவி விதை சான்று அலுவலா் சிவகுமாா், உதவி வேளாண் அலுவலா் சீனிவாசன், உதவி தோட்டக்கலை அலுவலா் நரசிம்மன் ஆகியோா் தங்கள் துறை ரீதியான தொழில் நுட்பங்களை தெரிவித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்