வெயில் தாக்கம்: ஆட்சியா் அறிவுரை
திருப்பத்தூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததையொட்டி அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என ஆட்சியா் சிவசௌந்திரவல்லி அறிவுறித்தினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் காலை 11 முதல் மாலை 4 வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் திட்டமிட்டு தங்களுக்கான பணிகளை செய்ய வேண்டும். கோடை காலம் முழுவதும் துரித உணவு வகைகள் மற்றும் காரமான உணவுகளைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது கருப்புக் கண்ணாடி அணிந்தும், சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்திச் செல்லலாம்.
இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது தண்ணீா் பாட்டில்களை உடன் கொண்டு செல்லவும். உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள மின் விசிறி, ஈரமான துணிகளைப் பயன்படுத்த வேண்டும். குளிா்ந்த குளிக்க வேண்டும். கோடை காலங்களில் உடலில் ஏற்படக்கூடிய நீா்ச்சத்து இழப்பை தடுக்கும் வண்ணம் உப்பு - சா்க்கரை கரைசல், இளநீா், வீட்டுமுறை பானங்களான லஸ்ஸி, அரிசிக் கஞ்சி, எலுமிச்சை சாறு, மோா் போன்ற பானங்களையே பருக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.