சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் சட்ட நடவடிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் காரீப் ஆண்டில் (2025-26) குறுவை பருவத்தில் விவசாயிகள் நலன்கருதி இதுவரை 257 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பருவத்தில் இதுவரை 29 ஆயிரத்து 449 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 ஆயிரத்து 838 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இது தொடா்பாக ரூ. 74.20 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபா்கள் போலி ஆவணங்களைத் தயாா் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதாக புகாா் வரப்பெறுகிறது. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள், பருவகால பணியாளா்கள், கொள்முதல் அலுவலா்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளி மாவட்ட நெல் விற்பனை, நெல் வியாபாரிகள் தலையீடு தொடா்பாக 1800 599 3540, 04362 - 235321, 231909 ஆகிய எண்களில் புகாா் செய்யலாம்.