israel palestine war: 'குண்டுமழை பொழியும் இஸ்ரேல்' - உயிர் பிழைக்க போராடும் மக்க...
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று(சனிக்கிழமை) நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று மக்கள் சந்திப்பு நடத்துகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் நாகப்பட்டினம் சென்றார்.
விஜய்யின் வருகையை ஒட்டி, நாகப்பட்டினத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று பகல் 1 மணி அளவில் வந்த விஜய், தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
"மக்களோடு மக்களாக நிற்பதுதான் என்னுடைய வேலை. இது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்.
மீனவர்களுக்காக குரல் கொடுப்பது மட்டுமின்றி ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். உலகத்தில் அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பது முக்கியம். அவர்களின் கனவுகளும் வாழ்க்கையும் முக்கியம்.
மீனவர்களுக்காக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசு இல்லை. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜக அரசும் இல்லை.
முதல்வர் வெளிநாடு சென்று வந்தார். அவர் செய்தது வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? வெளிநாட்டு முதலீடு இங்கு வருகிறதா? குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்குச் செல்கிறதா?
நான் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டபோது ஏகப்பட்ட நிபந்தனைகள். மின் தடை, நெருக்கடியான இடம் தேர்வு என பல நிபந்தனைகள்..
திமுகவும் பாஜகவும்தான் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்களே..
மேலும் பேருந்துக்குள்ளே இருக்க வேண்டும் கையையே இவ்வளவுதான் தூக்க வேண்டும். மக்களை பார்த்து சிரிக்காதே கை அசைக்காதே.. என ஏகப்பட்ட நிபந்தனைகள்.. மிரட்டி பார்க்கிறீர்களா? அதுக்கு நான் ஆள் இல்லை" என்று பேசினார்.