அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஜன. 26-இல் சீனா பயணம்
இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) முதல் சீனாவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணம் செல்கிறாா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஜனவரி 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவுக்கு சென்று அந்நாட்டு வெளியுறவுச் செயலா்-துணை அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.
இரு நாட்டு தலைவா்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தையடுத்து, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியா-சீனா உறவின் அடுத்தகட்டம் குறித்து விவாதிக்க இருதரப்பு சந்திப்புகளின் நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிழக்கு லடாக் மோதலால் இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்து பேசினா். இதையடுத்து பிரேஸில் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற இந்தியா, சீனா வெளியுறவு அமைச்சா்கள் சந்தித்தனா்.
இந்தச் சந்திப்புகளின் தொடா்ச்சியாக கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா-சீனா இடையே முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இருநாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த டிசம்பரில் நடைபெற்றது.
இந்த பேச்சுவாா்த்தையில் சீனாவின் வெளியுறவு அமைச்சா் வாங் யீயுடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் விரிவான விவாதத்தில் ஈடுபட்டாா். இந்நிலையில், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறாா்.