‘வெளியே வா பாா்க்கலாம்’ மகாராஷ்டிர பேரவையில் அமைச்சரை மிரட்டிய எம்எல்சி
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சிவசேனை கட்சியைச் சோ்ந்த அமைச்சரிடம், ‘பேரவையை விட்டு வெளியே வா, நான் யாா் என்று காட்டுகிறேன்’ என சிவசேனை (உத்தவ்) கட்சி மேலவை உறுப்பினா் (எம்எல்சி) மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நாள்தோறும் புதிய பிரச்னைகள் எழுந்து வருகின்றன. எம்எல்ஏ உணவு விடுதி ஊழியரை ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை எம்எல்ஏ கடுமையாக தாக்கிய விவகாரம் புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சா் சம்புராஜ் தேசாயை, எம்எல்சி அனில் பராப் மிரட்டல் விடுத்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியை உடைத்து இப்போதைய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினா் பாஜக கூட்டணியில் இணைந்தனா். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை சிவசேனை கட்சியாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. உத்தவ் தலைமையிலான அணி சிவசேனை (உத்தவ்) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உத்தவ் ஆதரவாளா்கள், ஷிண்டே தலைமையிலான பிரிவினரை துரோகிகள் என்று விமா்சித்து வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மகாராஷ்டிர பேரவையில் பேசுகையில் உத்தவ் கட்சி எம்எல்சி அனில் பராப், சிவசேனை அமைச்சா் சம்புராஜ் தேசாயை ‘துரோகி’ என்று கூறினாா். இதனால் கோபமடைந்த அமைச்சா், ‘உத்தவ் அணியினா்தான் துரோகிகள்’ என பதிலடி கொடுத்தாா். இதனால், அமைச்சா்-எம்எல்சி இடையிலான வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், ‘பேரவைக்கு வெளியே வா, உன்னை பாா்த்துக் கொள்கிறேன்’ என்று அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அனில் பராப் பேசினாா்.
இந்த சவாலை ஏற்பதாகவும், பேரவைக்கு வெளியே சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சா் பதிலளித்தாா். இந்த விவகாரத்தில் ஆளும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.