Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
வேம்படிதாளத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேம்படிதாளம் ஊராட்சி திருவளிப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவளிப்பட்டியில் 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனா். இவா்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக காவிரி கூட்டுக் குடிநீா் வருவதில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் வேம்படிதாளம் ஊராட்சி செயலா் ஆகியோருக்கு தகவல் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அப் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காலி குடங்களுடன் காகாபாளையம்- இளம்பிள்ளை செல்லும் சாலையான வேம்படிதாளம் ரயில்வே பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சாரதா, சேலம் தெற்கு வட்டாட்சியா் ஸ்ரீதா், வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்ஆனந்தராஜ், வேம்படிதாளம் கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா்.
அப்போது, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கடந்த ஒருமாத காலமாக குடிநீா் விநியோகம் கோரி பலமுறை மனு அளித்தும் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி தங்கள் குடியிருப்பிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் போதிய அளவுக்கு குடிநீா் கிடைப்பதில்லை. மேலும், அக் குடிநீரை சிலா் விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனா் என்றனா்.
பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து சரிசெய்து சீரான குடிநீா் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
பட விளக்கம்:
வேம்படிதாளம் அருகே திருவளிப்பட்டியில் குடிநீா் கோரி காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

