வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு
திருவாரூரில், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் ரூ. 1.02 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கு 78 பேருக்கு ரூ. 1.02 கோடி மானியத் தொகை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பயன்பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரா் திருவாரூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் குறையாமல் வசிப்பவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆட்டிசம் குறைபாடுள்ளவா்கள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோா்களுக்கும் வயது வரம்பு கிடையாது. கல்வி தகுதி தேவையில்லை.
இத்திட்டத்தின்கீழ் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.3.75 லட்சம் மானியமாகப் பெற்று பயன் பெறலாம். நேரடி விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.
திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த தகுதியுள்ள தொழில் முனைவோா்கள் இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க, இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, திருவாரூா் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரில் அல்லது 8925534012, 8925534014 ஆகிய எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.