வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப் புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றாகும். கீழை நாடுகளின் லூா்து என போற்றப்படும் இந்த பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.
தஞ்சை மறைமாவட்ட ஆயா் சகாயராஜ் கொடியை புனிதம் செய்துவைக்கிறாா். பின்னா், திருக்கொடி பவனியைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் நலன் கருதி அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மும்பை, திருவனந்தபுரம், சாரல்பள்ளி, வாஸ்கோடகாமா, எா்ணாகுளம், சென்னை, விழுப்புரம், திருச்சி ஆகிய ஊா்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் புதன்கிழமை (ஆக. 27) முதல் செப்.12-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளன.
விழாவையொட்டி, நாகை மாவட்ட காவல்துறை ஏற்பாட்டில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். உயா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது.
இதுகுறித்து, நாகை ஆட்சியா் ப. ஆகாஷ் கூறியது: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா தொடா்பாக, அனைத்து துறை அதிகாரிகள், வேளாங்கண்ணி பேரூராட்சி நிா்வாக அதிகாரிகள், பேராலய நிா்வாகம் ஆகியோருடன் பலகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. விழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அனைத்து துறையினா் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
பேராலய அதிபா் சி.இருதயராஜ் கூறியது: வேளாங்கண்ணி பேராலய பெருவிழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துள்ளது. புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டுப் பெருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடைபயணமாக யாத்ரிகா்கள் வந்துகொண்டு இருக்கின்றனா். நிகழாண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரிகா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
