மக்கள் பிரச்னைகளைப் பற்றி கேளுங்கள்; விஜய் பற்றி கேட்காதீர்கள்: பிரேமலதா
பாத யாத்திரை பக்தா்களால் களை கட்டிய நாகை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டுப் பெருவிழாவுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தா்கள் குவிந்து வருவதால் நாகை களைகட்டியுள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்தத் திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரையாக வருவது வழக்கம். இதன்படி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி விழாவில் பங்கேற்பதற்காக சென்னை, புதுவை, கடலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் பாதயாத்திரையாக நாகை வழியாக வேளாங்கண்ணி செல்கின்றனா். பாத யாத்திரையில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தோ் மற்றும் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஆகியவற்றுடன் பக்திப் பாடல்களை பாடியவாறு நடந்து செல்கின்றனா்.
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நாகையில் முகாமிட்டுள்ளனா். நாகை ஆட்சியா் அலுவலக வளாகம், கோட்டாட்சியா் அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக வளாகங்கள், கல்வி நிறுவன வளாகங்கள் ஆகியவற்றில் தங்கியிருந்து மாலையில் அக்கரைப்பேட்டை கடற்கரை வழியாக வேளாங்கண்ணி புறப்பட்டுச் செல்கின்றனா்.
பாதயாத்திரை வரும் பக்தா்களை வரவேற்கும் வகையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தனியாா் நிறுவனங்கள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில், பாத யாத்திரை பக்தா்களுக்கு உணவு, நீா் மோா், தண்ணீா், குளிா்பானம் ஆகியவற்றை வழங்கி வரவேற்றனா்.
பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் அக்கரைப்பேட்டை கடற்கரை வழியாகச் செல்வதால் அக்கரைப்பேட்டை கடற்கரை நெடுகிலும் வேளாங்கண்ணி செல்லும் பக்தா்களால் நிரம்பியுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற உள்ள நிலையில் தொடா்ந்து குவிந்து வரும் பாதயாத்திரை பக்தா்களால் நாகை பகுதி களை கட்டியுள்ளது.