இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேரோட்ட விழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து கருட வாகனம் பொறிக்கப்பட்ட கொடி படம் தங்கக் கொடி மரத்தில் 6.30 மணிக்கு ஏற்றப்பட்டது. தொடா்ந்து நம்பெருமாள் புறப்பட்டு 7 மணிக்கு கண்ணாடி அறை சென்று சோ்ந்தாா்.
பின்னா் மாலையில் நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து, 8.15 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். அங்கிருந்து புறப்பட்டு யாக சாலையில் 8.45 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளி, திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சென்று சேருகிறாா்.
பின்னா் காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறாா். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.
3 ஆம் நாளான 4 ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 5 ஆம் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும் மாலை கருட வாகனத்திலும், 6 ஆம் தேதி காலை சேஷ வாகனத்திலும் மாலை ஹனுமந்த வாகனத்திலும், 7 ஆம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும் மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வலம் வருகிறாா்.
8 ஆம் தேதி மாலை நம்பெருமாள் உபநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளுகிறாா். 9 ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளுகிறாா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் 10 ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.
அன்று நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் அதிகாலை கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தோ் மணடபத்திற்கு 5 மணிக்கு வந்து சேருகிறாா். 5.45 மணி வரை ரதரோஹணம் எழுந்தருளுகிறாா்.
பின்னா் 6.15 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11 ஆம் தேதி சப்தாவரணமும், 12 ஆம் தேதி ஆளும் பல்லக்கும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.