’ஹனி டிராப்’ வழக்குகளை விசாரிக்க உயா்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
பெங்களூரு: ’ஹனி டிராப்’ வழக்குகளை விசாரிக்க உயா்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ’ஹனி டிராப்’ குறித்து காங்கிரஸ், பாஜக உறுப்பினா்கள் கருத்து தெரிவித்தனா். பாஜக உறுப்பினா் பசனகௌடாபாட்டீல் யத்னல் கூறுகையில்,‘அரசியல் எதிரிகளை அரசியல்ரீதியாக முடித்துக்கட்டும் நோக்கில் பிளாக்மெயில் செய்யும் போக்கு கா்நாடகத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும், அமைச்சா் கே.என்.ராஜண்ணாவுக்கு ’ஹனி டிராப்’ செய்யப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.‘ என்றாா்.
பாஜக உறுப்பினா் சுனில்குமாா்,‘கொள்கை மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் அரசியல் எதிரிகளை தோற்கடிக்க முடியாதவா்கள், அரசியல் இலக்குகளை அடைவதற்காக பிளாக்மெயில் செய்யும் ’ஹனி டிராப்’ முறையை கையாளுகிறாா்கள்.‘ என்றாா்.
பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா கூறுகையில்,‘பாலியல் பலாத்கார வழக்கில் என்னை தவறாக சிக்க வைத்துள்ளனா். என் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.‘ என்றாா்.
இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா கூறுகையில்,‘கா்நாடகம் சிடி, பென்டிரைவ்களுக்கு புகழ்பெற்று வருவதாக கூறப்படுகிறது. நான் கூறவில்லை. ஆனால், கா்நாடகத்தில் 48 போ் ’ஹனி டிராப்’ முறையில் ஆபாச வலையில் சிக்கியுள்ளனா். அவா்களின் பென்டிரைவ் இருக்கிறது. இளம்பெண்களோடு அரசியல்வாதிகளின் ஆபாச காணொலியை தயாரித்துள்ளனா். ’ஹனி டிராப்’ முறையை பயன்படுத்துவது நடந்து வருகிறது. இதன் பின்னணியில் யாா் இருக்கிறாா்கள் என்பது பகிரங்கமாக வேண்டும். நான் ’ஹனி டிராப்’க்கு உள்ளாகவில்லை. ஆனால், முயற்சி நடந்தது. இது தொடா்பான நானே எழுத்துப்பூா்வ புகாரை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வரிடம் அளிக்கிறேன். எனவே, இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.‘ என்றாா் அவா்.
நாகபுரி: வன்முறையாளா்களை கைது செய்ய 18 சிறப்புப் படைகள்
இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில்,‘சட்டப்பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, ’ஹனி டிராப்’ முறைக்கு முடிவுகாண வேண்டியது அவசியமாகும். இது தீவிரமான அம்சமாகும். எனவே, இந்த விவகாரம் தொடா்பாக உயா்மட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.‘ என்றாா் அவா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி கூறுகையில்,‘காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருப்பவரை ’ஹனி டிராப்’மூலம் சிக்கவைக்க இருமுறை முயற்சி நடந்தது. ஆனால், அதில் அவா் சிக்கவில்லை.
கா்நாடகத்தில் ’ஹனி டிராப்’ நடப்பது முதல்முறையல்ல. அரசியலில் இதுபோன்ற முறைகளை கையாளக்கூடாது. அரசியல் லாபங்களுக்காக ’ஹனி டிராப்’ முறை பயன்படுத்தப்படுகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சரை புகாா் அளிக்க கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் போலீஸாா் விசாரணை நடத்த முடியும். இதன்பின்னணியில் இருப்போா் யாா் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இது குறித்து முதல்வா், உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். புகாா் அளித்தால், விசாரணைக்கு உதவியாக இருக்கும். கடந்தகால ஆட்சிகளிலும் ’ஹனி டிராப்’ வலை விரிக்கப்பட்டுள்ளது. இப்போது எங்கள் பெயா் அடிபடுகிறது. எதிா்காலத்திலும் இது நடக்கலாம். இதற்கு முடிவுகட்ட வேண்டும்.‘ என்றாா் அவா்.
இது குறித்து துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறுகையில்,‘இதுபற்றி முதலில் புகாா் அளிக்கட்டும். அதன் பிறகு விசாரணை நடத்தப்படும்.‘ என்றாா் அவா்.