ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல்; நடந்தது என்ன?
ராமேஸ்வரம் நகரில் துப்பரவு பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தினை தனியார் ஒருவரிடம் நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்த நபர், நகரில் அன்றாடம் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வட மாநிலங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களை நியமித்துள்ளார்.
இதில் வட மாநிலங்களை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையம், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினால் அமைத்து தரப்பட்டுள்ள தகர செட்டுகளில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அக்னி தீர்த்த பகுதியில் உள்ள தகர செட்டில் வட மாநிலத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குடும்பத்துடன் உறங்கியுள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அந்த தகர செட்டிற்குள் குடி போதையில் 3 பேர் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த சிறுமியை தூக்கி செல்ல முயன்றுள்ளனர். இதனால் அச்சிறுமி அலறியுள்ளார். சிறுமியின் அலறலை கேட்ட குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை மட்டும் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் இது குறித்து தங்களது ஒப்பந்தகாரருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நபர் அங்கு வந்த விசாரித்து கொண்டிருந்த போது பிடிப்பட்ட நபரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நேற்று காலை போலீஸாரிடம் முறையிடப்பட்ட நிலையில் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் கவனத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் களத்திற்கு வந்த போலீஸார், பாதிக்கப்பட்ட வட மாநில துப்புரவு பணியாளர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி புகார் பெற்றுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் அக்னி தீர்த்தத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா சிக்கிய சம்பவம் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது வட மாநில சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் அந்த அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.