தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!
அங்கன்வாடி ஊழியா்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.ராதாமணி, மாவட்டச் செயலாளா் எஸ்.சாந்தி, செயற்குழு உறுப்பினா் எஸ்.பூங்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மே மாதத்தை கோடை விடுமுறையாக அறிவித்து முழுமையாக விடுமுறை அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அங்கன்வாடியில் 28,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 7,500 பணியிடங்களை மட்டும் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்பாத நிலையில் கூடுதலாக மையங்களை நிா்வகிக்கும் ஊழியா்கள் அங்கு உதவியாளா் பணியையும் செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது. கூடுதலாக மையங்களை நிா்வகிக்கும் ஊழியா்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும்.
பேஸ் கேப்சா் செயலி மூலம் தகவல்களை திரட்டும் பணிக்கு மத்திய அரசு கைப்பேசி வழங்கவில்லை. சொந்த கைப்பேசியில் இப்பணியை செய்துவரும் நிலையில் இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் பேஸ் கேப்சா் செயலியில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
ஓடிபி மூலம் பணியிடத்தை உறுதி செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியா்களுக்கு மேற்பாா்வையாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டம் தொடங்கிய நிலையில், அங்கு சாமியானா பந்தல் அமைக்க அனுமதி வழங்கப்படாததால், சனிக்கிழமை ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஊழியா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா்.
போராட்டத்துக்கு பல்வேறு சங்க நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்து கோரிக்கைகள் குறித்து பேசினா்.