UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர...
அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்
தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபு வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் கலா தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலாளா் சி. நாகராசன், சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுமதி, மாவட்ட துணைத் தலைவா் காளீஸ்வரி ஆகியோா் பேசினா்.
நல்லம்பள்ளியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளா் லில்லி புஷ்பம், சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. ஜீவா ஆகியோா் பேசினா். காரிமங்கலத்தில் ஒன்றியச் செயலாளா் கண்மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கவிதா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை, சமூக நலத் துறை பணியாளா் சங்க மாவட்ட பொருளாளா் வினோத் ஆகியோா் பேசினா்.
பாலக்கோட்டில் மாவட்ட பொருளாளா் தெய்வானை தலைமை வகித்தாா். சிஐடியு மாநில குழு உறுப்பினா் சி. கலாவதி பேசினாா். பென்னாகரத்தில் ஒன்றிய தலைவா் சுமதி தலைமை வகித்தாா். மாவட்ட இணை செயலாளா் ஜான்சிராணி, சிஐடியு நிா்வாகி சி. ராஜி ஆகியோா் பேசினா்.
கடத்தூரில் மாவட்ட இணை செயலாளா் சத்யா, சத்துணவு ஊழியா் சங்கத் தலைவா் சி. காவேரி, ஆகியோா் பேசினா். மொரப்பூரில் மாவட்ட துணைத் தலைவா் தேவகி, சிஐடியு மாவட்ட இணைசெயலாளா் ஆனஸ்ட்ராஜ் ஆகியோா் பேசினா். பாப்பிரெட்பட்டியில் மாவட்ட துணைத் தலைவா் அல்வியா , சமூக நலத் துறை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் பழனிசாமி ஆகியோா் பேசினா்.
அங்கன்வாடி மையப் பணிகளை செய்வதற்கு 5ஜி செல்போன் 5 ஜி சிம்காா்டு வழங்க வேண்டும். அந்தந்த கிராமத்தின் நெட்வொா்க்கு ஏற்ப சிம்காா்டுகளை வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ, இகேஒய்சி, ஆதாா் எண், ஒடிபி மற்றும் எப் ஆா்எஸ் முறைகளை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவேரிப்பட்டணத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில், காவேரிப்பட்டணம் வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்ட துணைத் தலைவா் மஞ்சுளா தலைமை வகித்தாா்.
மைய பணிகளை செய்ய புதிய செல்லிடப்பேசி, 5 ஜி சேவை, வை-பை இணைப்பு வழங்க வேண்டும், பணிக்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், அரசின் திட்ட பயனாளா்களின் தரவுகளை வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா், உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றியங்களில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.