Madras Day: ராணி மேரி கல்லூரியில் சென்னை தின நிகழ்ச்சி; சென்னை சார்ந்த ஓவியக் கண...
விஜய் தராதரம் அவ்வளவுதான்: அமைச்சர் கே.என். நேரு பதிலடி!
திருச்சி: நேற்று அரசியலுக்கு வந்த விஜய், ஒரு மாநிலத்தின் முதல்வரை, மாபெரும் இயக்கத்தின் தலைவரை, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவரை நாகரிகமன்றி பேசியிருப்பது அவமரியாதைக்குரியது, இழிவுபடுத்துவதாக விமரிசனம் செய்துள்ள அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான கே.என். நேரு, விஜய் தராதரம் அவ்வளவுதான் என கூறியுள்ளார்.
மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் அவர் பேசுகையில், 1967-இல், 1977-இல் அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போல வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் மூலமும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்.
தவெகவின் விக்கிரவாண்டி மாநாடு தமிழக அரசியலின் தட்பவெப்பத்தை மாற்றியது. இந்த மாநாட்டுக்குப் பிறகு எண்ணற்ற எதிா்ப்புக் குரல்கள் எழும்பின. அனைத்து கூக்குரல்களையும் சிறிய சிரிப்புடன் கடந்துவிட்டோம்.
தற்போது, மதுரை மாநாட்டில் ஒலிக்கும் குரல் உலகத் தமிழா்களின் இல்லங்களிலிருந்து ஒலிக்கும் குரல். நான் அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்ததும் பலா் பல சந்தேகங்களை தங்கள் கருத்தாகப் பரப்பினா். அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்துள்ளது தவெக.
தவெகவின் ஒரே கொள்கை எதிரி பாஜக. ஒரே அரசியல் எதிரி திமுக. கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டு, மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொள்ளும் அரசியலில் தவெக ஈடுபடாது. மகத்தான மக்கள் சக்தி தவெகவுக்கு இருக்கும்போது நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மதச்சாா்பின்மை எனக் கூறி மக்களை ஏமாற்றுவோருடனும், ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு அடிபணிவோருடனும் நமக்குக் கூட்டணி தேவையில்லை.
மத்திய அரசு என்பது ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கான அரசா? அல்லது சிறுபான்மை இஸ்லாமியா்களுக்கு எதிராக சதி செய்யும் அரசா? என்பதற்கு பிரதமா் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் ஏறத்தாழ 800 போ் இதுவரை கொல்லப்பட்டுள்ளனா். இனியும் இந்த அவலம் தொடராத வகையில், தமிழக மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு உடனடியாக கச்சத்தீவை மீட்க வேண்டும். இதேபோல, பல உயிா்களைக் காவு கொண்ட நீட் தோ்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தாமரை இலையில் தண்ணீா் ஒட்டாது. இதேபோல, தமிழகத்தில் பாஜகவும் ஒட்டாது.
"ஸ்டாலின் அண்ணா, உங்களுக்கு மனசாட்சி இருந்தால், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் நடத்தும் அரசாங்கத்தில், நேர்மை இருக்கிறதா?, ஊழல் இல்லாத துறை இருக்கிறதா?, சட்டம்-ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுகிறதா? பெண்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா? சொல்லுங்கள், என் அன்பு ஸ்டாலின் மாமா, சொல்லுங்கள்," என்று விஜய் கூறினார்.
மேலும், மகளிருக்கு மாதம் ரூ. 1,000 தருவதன் மூலம் ஆட்சியின் அவலங்களை மூடி மறைத்துவிடலாம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கருதிவிடக் கூடாது. பெண்களின் கதறல்களுக்கு அரசு செவிமடுக்கவில்லை. இதற்கெல்லாம் தமிழக முதல்வரும், என் அன்பு மாமா ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். அரசு ஊழியா்கள், மீனவா்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றியுள்ளது திமுக அரசு.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுகவும், பாஜகவும் ரகசியக் கூட்டணி அமைத்துக் கொண்டு நாடகமாடுகின்றன. தமிழக அமைச்சா்கள் வீட்டுக்கு அமலாக்கத் துறை சோதனைக்குச் சென்றால், அடுத்த நாள் திமுக தலைவா்கள் தில்லிக்குச் சென்று மத்திய ஆட்சியாளா்களைச் சந்திக்கின்றனா். இந்த விவகாரம் அந்த நாளுடன் முடிந்து விடுகிறது. இதெல்லாம் மிகவும் தவறு. இவற்றுக்கெல்லாம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பதில் கூறியே ஆக வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடினார்.
எம்.ஜி.ஆா். தொடங்கிய கட்சி தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அப்பாவித் தொண்டா்கள் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் யாருக்கு வாக்களிப்பது? என்பது அந்தத் தொண்டா்களுக்கு நன்கு தெரியும். எனவே, எந்த வேடமிட்டு தமிழகத்துக்குள் பாஜக வந்தாலும், அவா்களின் எண்ணம் ஈடேறாது என பேசினார்.
விஜய் தராதரம் அவ்வளவுதான்
இந்நிலையில், நேற்று அரசியலுக்கு வந்த விஜய், ஒரு மாநிலத்தின் முதல்வரை, மாபெரும் இயக்கத்தின் தலைவரை, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவரை நாகரிகமன்றி "மாமா" என்று பேசியிருப்பது அவமரியாதைக்குரியது, இழிவுபடுத்துவதாக விமரிசனம் செய்துள்ள அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான கே.என். நேரு, விஜய் தராதரம் அவ்வளவு தான் என கூறியுள்ளார்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மக்கள் போற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விமர்சித்துள்ளார்.
பெண்கள் வாழ்வில் அந்த 1000 ரூபாய் எப்படி பயன்படுகிறது என்று சினிமாவின் உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்க்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் பெண்கள் வாழ்வில் வெளிச்சமாக இருந்து வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விமரிசனம் செய்திருக்கிறார்.
ஒருவேலை விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போது, பெண்களை சந்தித்தால், 1000 ரூபாய் எப்படி அவர்கள் வாழ்க்கையில் பயன்பட்டது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.
மேலும், ஒரு மாநில முதல்வர் என்றும் பார்க்காமல் தரம்தாழ்ந்து விமரிசனம் செய்திருக்கிறார். மக்கள் போற்றும் ஆட்சியை கடுமையாக விமரிசனம் செய்துவிட்டு, பாஜக அதிமுகவை மயில் இறகு கொண்டு விமரிசனம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். இதில் இருந்தே விஜய் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.
ஒரு மாநிலத்தின் முதல்வரை, மாபெரும் இயக்கத்தின் தலைவரை, 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவரை நேற்று அரசியலுக்கு வந்த விஜய் 50 பேர் கூடிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? விஜய் தராதரம் அவ்வளவுதான். இதற்கு தேர்தலில் மக்களே சரியான பதிலடி கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.
தவெக மதுரை மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்கள் கூடியதால், அது அவருக்கு ஒரு பெரிய பலத்தைக் காட்டியது. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இரண்டிற்கும் மாற்றாக தவெகவை மூன்றாவது அணியாக முன்வைக்க விஜய் விரும்புகிறார்.