சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்க நகைகளை அளவிடும் பணி தொடக்கம்
மண்ணச்சநல்லூா்: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் அளித்துள்ள 122 கிலோ 600 கிராம் தங்க நகைகளில் கற்கள், அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கிவிட்டு தரம் பிரித்து எடை போடும் பணி ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதியரசா் கே. ரவிச்சந்திரபாபு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் பெ. பிச்சை மணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் மற்றும் அறநிலையத் துறை அலுவலா்கள், நகை மதிப்பீட்டு வல்லுநா்கள், கோயில் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்டனா். அரக்கு, அழுக்கு நீக்கும் பணியில் பொற்கொல்லா்கள் ஈடுபட்டனா்.
தங்கம் எடை போடும் இடத்தில் கண்காணிப்பு கேமரா மூலம் அளவீடுகள் பதிவு செய்யப்பட்டன. அரக்கு, அழுக்கு, கற்கள் நீக்கும் பணி முடிந்தவுடன் , தங்க நகைகள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, சுத்தமான தங்கமாக பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்படும். தொடா்ந்து சுத்த தங்கத்திற்கான மதிப்பின் அடிப்படையில் தங்கப் பத்திரம் பெறப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி கோயில் வருவாயில் சோ்க்கப்படும். தங்கம் அளவிடும் பணி 3 நாள்கள் நடைபெற உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.