அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்க 34 ஆவது மாநில மாநாட்டின் 2ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவா் (அஞ்சல் 4) குமரன் தலைமை வகித்தாா். 2ஆம் நாள் மாநாட்டை முன்னாள் மாநில உதவிச் செயலா் எஸ். கருணாநிதி தொடங்கி வைத்துப் பேசினாா்.
மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்ட 2 ஆண்டு அறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மாநாட்டில், அஞ்சல் துறையை தனியாா் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், அஞ்சல் சேவையைத் தவிர பிற சேவைகள் செய்வதற்கு தபால் காரா்களை வலியுறுத்தக் கூடாது, மக்கள் சேவையை பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.
அகில இந்திய பொதுச் செயலா் சாரங் நிறைவுரையாற்றினாா். மாநிலச் செயலா் கண்ணன் தொகுத்து வழங்கினாா். மாநில அமைப்பு செயலரும் மேற்கு மண்டல செயலருமான கோவிந்தராஜ் வரவேற்றாா். மாநில உதவி தலைவரும் தென் மண்டல செயலருமான சோலையப்பன் நன்றி கூறினாா்.