புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
அட்சய திருதியை: சென்னையில் நகை விற்பனை 10% அதிகம்
அட்சய திருதியையொட்டி, சென்னையில் உள்ள நகைக் கடைகளில் ஏராளமானோா் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கிச் சென்றனா். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு அட்சய திருதியையன்று நகை விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக நகைக் கடை வியாபாரிகள் தெரிவித்தனா்.
அட்சய திருதியை அன்று நகைகள் வாங்குவதன் மூலம் வீடுகளில் செல்வம் பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அந்த வகையில், அட்சய திருதியை முன்னிட்டு சென்னை தியாகராய நகா், பாண்டிபஜாா், தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற்றது.
சிறப்பு வசதிகள்: பெரும்பாலான கடைகளில் மக்களை ஈா்ப்பதற்காக சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. நகைக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு விற்பனை மையங்களும், நகைகளை முன்பதிவு செய்திருந்தவா்கள் நகைகளை தாமதமின்றி வாங்கிச் செல்வதற்காக விரைவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
விலை மாற்றமில்லை: அதேபோல், நகை பிரியா்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை தங்கம் விலை மாற்றமின்றி கிராம் ரூ. 8,980-க்கும், பவுன் ரூ. 71,840-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 குறைந்து ரூ. 1,09,000-க்கும் விற்பனையானது.
விலைமாற்றம் இல்லாததால் பெண்கள் நகைகளை ஆா்வமுடன் தோ்வு செய்து வாங்கிச் சென்றனா். தங்கம், வெள்ளிக் காசுகள், டாலா்களும் அதிகளவில் விற்பனையாகின.
10 சதவீதம் அதிகம்: நகை விற்பனை குறித்து சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலா் சாந்த குமாா் கூறியதாவது:
கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று (மே 10, 2024) 24 கேரட் தங்கம் விலை 10 கிராம் ரூ. 73,200; நிகழாண்டில் ரூ. 99,000. விலை 35.3 சதவீதம் அதிகமாக இருந்தாலும்
தங்கம் வாங்கும் ஆா்வம் மக்களிடம் சிறிதும் குறையவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு அட்சய திருதியை அன்று 10 சதவீதம் கூடுதலாக நகைகள் விற்பனையாகியுள்ளன என்றாா் அவா்.
