காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை
சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் குறிப்பாணை குறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநா் திருநாகேஸ்வரன் வியாழக்கிழமை கூறியதாவது:
வங்கக் கடலில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்.14-ஆம் தேதி தொடங்கியதையடுத்து, அனைத்து விசைப்படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 800 விசைப்படகுகளும், எண்ணூா் முதல் திருவான்மியூா்வரை 2,200 செயற்கை இழை படகுகளும் உள்ளன.
மத்திய மீன்வளத் துறை அறிவுறுத்தலின்பேரில் அனைத்து வகை படகுகளையும் நேரடி கள ஆய்வு முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரியல் கிராப்ட் என்ற வலைதளத்தில் படகு பதிவெண்ணை புதுப்பிக்கவும், இயக்கத்தில் இல்லாத படகுகளை பதிவு நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி விசைப்படகுகள் அனைத்தும் மே 15-ஆம் தேதியும், இதர படகுகள் மே 22-ஆம் தேதியும் ஆய்வு செய்யப்பட உள்ளன.
ஆய்வின் போது, படகின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களைக் காண்பிப்பதோடு அவற்றின் நகல்களை ஆய்வுக் குழுவினரிடம் அளிக்க வேண்டும். வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் மானிய அட்டை, துறையால் வழங்கப்பட்டுள்ள விஎச்எஃப் கருவி, செயற்கைகோள் தொலைபேசி, ட்ரான்ஸ்பாண்டா் ஆகிய கருவிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். படகில் பதிவெண் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஆய்வின்போது காண்பிக்கப்படாத படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் நிறுத்தப்படுவதுடன், அந்தப் படகின் பதிவு எண் ரத்து செய்யப்படும். இது குறித்து பல்வேறு மீனவா் சங்க நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கள ஆய்வுகள் மூலம் போலியாக சலுகைகளைப் பெறுவது தடுக்கப்படும் என்றாா் அவா்.