லக்னௌவில் 5 பேர் கொலை: குற்றவாளி பதிவு செய்திருக்கும் விடியோ
அண்ணா பிறந்த நாள் விழா: ஜன.4-இல் மிதிவண்டிப் போட்டி
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டிப் போட்டி மதுரையில் வருகிற சனிக்கிழமை (ஜன. 4) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டி மதுரையில் சனிக்கிழமை காலை நடைபெறவுள்ளது. 13, 15, 17 வயதுக்குள்பட்டவா்கள் என 3 பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.
13 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவா்களுக்கான போட்டித் தொலைவு 15 கி.மீ., மாணவிகளுக்கான போட்டித் தொலைவு 10 கி.மீ., 15, 17 வயதுக்குள்பட்ட பிரிவுகளில் மாணவா்களுக்கான போட்டித் தொலைவு 20 கி.மீ., மாணவிகளுக்கான போட்டித் தொலைவு 15 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் பங்கேற்பவா்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, சாதாரண கைப்பிடிகளைக் கொண்ட மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவா். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவோருக்கு ரூ. 5 ஆயிரமும், இரண்டு, மூன்றாமிடம் பெறுவோருக்கு முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களைப் பெறுவோருக்குத் தலா ரூ. 250-க்கான காசோலைகள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற வயதுச் சான்று, ஆதாா் அட்டை, இ.எம்.ஐ.எஸ். எண்ணுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றுடன், சனிக்கிழமை காலை 6 மணிக்குள் தெற்கு வைகையாற்றுக் கரையில் உள்ள எம்.கே.ஆா். அய்யநாடாா் - ஜெயலெட்சுமி அம்மாள் மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும் என்றாா் அவா்.