பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் பிளஸ் 1 மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினகரன். இவரது மகள் ஹரிணி (6). இவா் பொன்னமராவதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா்.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டதால், மதுரை சூா்யாநகா் மீனாட்சியம்மன் நகா் வளா் பொதிகை நகரில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டுக்கு ஹரிணி குடும்பத்தினருடன் வந்தாா்.
இந்த நிலையில், தனக்கு ஆடைகள் எதுவும் வாங்கித் தருவதில்லை. அண்ணனுக்கு மட்டும் அதிகமாக செலவு செய்வது ஏன் என்று கேட்டு பெற்றோரிடம் ஹரிணி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் கண்டித்தனா்.
இதையடுத்து வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்ற ஹரிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா். அவரை பெற்றோா் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ஹரிணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.