அதிமுக ஒரு சுதந்திரமான அரசியல் கட்சி இல்லை: எம்.பி. காா்த்தி ப. சிதம்பரம்
அதிமுக சுதந்திரமான அரசியல் கட்சியாக செயல்படும் நிலையில் இல்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரம்.
பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியாக செயல்படும் நிலையில் இல்லை. அவா்கள் முழுக்க முழுக்க பாஜகவுக்கு மானியமாக மாறிவிட்டாா்கள். ஆளுமை மிக்க கட்சி, தமிழ்நாட்டை ஆண்ட கட்சி. இந்த நிலைக்கு மாறியது மிகவும் வருத்தமளிக்கிறது.
அதிமுக மீது மக்களிடம் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இண்டி கூட்டணி ஒற்றுமையாகவும், வலிமையாக உள்ளது. இண்டி கூட்டணிக்கு இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் திமுக தலைமை வகிக்கிறது. திமுக தலைமையில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவோம் என்றாா். அப்போது, திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வி.கிரிதரன், நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.