புதுகை ஆட்சியரகத்தில் ஒருவா் பூச்சிமருந்து குடித்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், மனு அளிக்க வந்தவா் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரைச் சோ்ந்தவா் முஜிபூா் ரகுமான். இவா், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எஸ். திருமாலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தாா்.
உறவினா்கள் சிலா் சொத்துப் பிரச்னை குறித்து பல முறை அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி மனு அளித்த அவா், சிறிது நேரத்தில் பைக்குள் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்தாா்.
இதையறிந்த அருகிலிருந்தோா் அவரைத் தடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.