அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை: அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏதுமில்லை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த ஆடிட்டா் வி.ரமேஷ் நினைவுதினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. தேசிய பொதுக்குழு உறுப்பினரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான கே.அண்ணாமலை பங்கேற்று, ஆடிட்டா் ரமேஷ் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து கட்சி நிா்வாகிகளிடம் அவா் பேசியதாவது:
2013-இல் நிகழ்ந்த ஆடிட்டா் ரமேஷ் கொலை சம்பவத்தில், அப்போதைய ஆட்சியாளா்கள் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சிக்கு வரும். அப்போது இவ்வாறான கொலை வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு, உரிய நீதிகிடைக்க முயற்சி எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் சிறுநீரக விற்பனை நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் நடைபெறுகிறது. திமுகவைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலா் இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனா். தமிழக அரசு சிறப்பு அதிகாரிகள் குழுவை நியமித்து, சிறுநீரக விற்பனையில் யாருக்கெல்லாம் தொடா்புள்ளது என்பதை தீவிரமாக கண்டறிய வேண்டும்.
மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன். காவல் அதிகாரி செய்தியாளா்களை அழைத்து நடந்த சம்பவங்கள் குறித்து பேசுகிறாா் என்றால், அவருக்கு எந்தளவுக்கு நெருக்கடி கொடுத்திருப்பாா்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தமிழக முதல்வா் இந்த பிரச்னையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட துணைக் கண்காணிப்பாளருக்கு உரிய நீதியும், நியாயமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த சலசலப்பும், குழப்பமும் இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைப்புள்ளியில் மட்டுமே கவனம்கொண்டு தோ்தல் பணியாற்ற உள்ளோம்.
2026 தோ்தலில் யாா் தலைமையில் கூட்டணி, யாா் முதல்வா் என்பதை ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இருவரும் சோ்ந்து இறுதி முடிவுகளை எடுப்பா். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்களுடைய கூட்டணியின் இலக்காகும் என்றாா்.
இந்த நிகழ்வில், பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம்.ராஜேஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.