அதிமுக வாக்குகள் விஜய்க்கு போகாது: டி.ஜெயக்குமாா்
சென்னை: எம்ஜிஆா் படத்தைப்பயன்படுத்தினாலும்,அதிமுக வாக்குகள் விஜய்க்கு போகாது என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலா்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணா, எம்ஜிஆா் ஆகியோா் உலகம் முழுவதும் தவிா்க்க முடியாத மாபெரும் சக்திகள்.
எங்கள் தலைவா்களின் படங்களை தவெக கட்சியினா் பயன்படுத்துவது வரவேற்புக்குரியது. அண்ணாவை வணங்கட்டும்; போற்றட்டும்.
அவா்களது படங்களை வைப்பதால், அதிமுக வாக்குகள் விஜய் பெற்றுவிட முடியாது. அதிமுக வாக்குகள் தமது கட்சிக்கு கிடைக்கும் என விஜய் நினைத்தால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.
சென்னையில் அக்டோபா், நவம்பரில் பலத்த மழை இருக்கும் என்று கூறுகின்றனா். நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பெரு மழைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளாா்.
தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமல் திமுக அரசு தோல்வியைத் தழுவி வருகிறது என்றாா்.