உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்!
அந்த காய்கறிக்கடை பாட்டி டு பக்கத்து வீட்டு ராஜி அக்கா... ஒரு ஆண்டு என்னவெல்லாம் செய்யும்?
புது வருடம் தொடங்குகிறது. எல்லோருக்கும் ஏதோ கனவுகள், ஆசைகள், இலக்குகள், எதிர்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், ஒரு ஆண்டு தொடங்குவது போல வருடம் முழுவதும் இருப்பதில்லையே என்ற வருத்தம் ஏதோ ஒரு நொடியில் தோன்றி மறையும். நாம் கடந்து வந்தது ஒரு வருடம் என்று நினைக்காமல்... அனுபவங்கள் என்று நினைத்தால் புத்துணர்ச்சியூட்டும் கணங்கள் நிறைந்திருக்கும். கணங்களால் நிறைந்ததுதானே இந்தச் சின்ன வாழ்வு... அப்படி ஆற்றுப்படுத்திய, மகிழ்வூட்டிய, கடந்து சென்ற நிமிடங்களின் பகிர்வுகளும், நன்றி சொல்ல வைத்த மனிதர்களின் பட்டியல்களின் ரீவைண்ட்.
பணம்தான் வாழ்க்கையின் பிரதானம் என்று அழுத்தத்தில் நின்ற நிமிடம் அது. எவ்வளவு சம்பாதிப்பது, எவ்வளவுதான் ஓடுவது, வாழ்க்கையில் எப்போது நிறைவு கிடைக்கும், சொந்த வீடு, கார், குழந்தையின் கல்வி, பொழுதுபோக்குகள் என சமூகம் நம் மீது வைத்திருக்கும் அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது என பல கேள்விகள் மனதில் ஓடியது. கண்கள் ஒரு இடத்தில் நிலைகுத்தி நிற்க... மனிதர்களின் கால்கள் அங்கும் இங்கும் வேகமாக ஓடியது இன்னும் பதட்டத்தை அதிகரித்தது.
பரபரப்புக்கு நடுவில் ஒரு போன்கால் மாமியாரிடம் இருந்து 'தக்காளியும், வெங்காயமும் வேணும்' என்று. கணவரின் பைக்கில் இருந்து இறங்கி திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு கீழ் இருக்கும் தெருவோர கடையில் காய்கறிகளை வாங்கினேன். 'ஜி பேல ஸ்கேன் பண்ணிக்கிறேன்' என்று நிமிர்ந்து பார்த்த போது ' ஜி பே இல்ல தாயீ ' என்றார் 80 வயது கடைக்கார பாட்டி. பர்ஸை திறந்து பார்த்தால் 500 ரூபாய் மட்டுமே இருந்தது. 500 ரூபாயை நீட்ட 30 ரூபாய்க்கு 500 ரூபா கொடுத்தா எப்படி? சில்லறை இல்லம்மா என்றார்.
நான் எதுவும் சொல்லாமல் 100 மீட்டர் தள்ளி ரோட்டின் மறுபுறம் நின்று கொண்டிருந்த கணவரிடம் சில்லறை வாங்க ஓடினேன். அவர் சில்லறை மாற்றி வருவதாக சொல்ல நான் ரோட்டில் நின்று கொண்டிருந்தேன். கடையில் இருந்து அந்தப் பாட்டி கைகளை அசைத்து என்னை அழைத்தார். காசு கேட்கத்தான் அழைக்கிறார் என்ற எண்ணம் எனக்கு. சற்றே எரிச்சலுடன் ரோட்டை கடந்து வந்தேன், "பாட்டி சில்லறை கொடுத்துட்டுதான் போவேன்... உன் 30 ரூபாய தூக்கிட்டு ஓடிற மாட்டேன்.” என்று கறார் குரலில் கத்தினேன். "இல்லம்மா நீ பரபரப்பா வந்த... ரயில பிடிக்கணுமா? போ...சில்லறைய சாயங்காலம் குடு; இந்தப் பாட்டிய ஏமாத்திட்டு நீ என்ன ஓடிறவா போற? இல்ல 30 ரூவால நான் கோட்டை கட்டிறப்போறேனா?' என்று பணத்தை பற்றி கவலைப்படாமல் பாட்டி சொல்லும் போது அவரின் கண்களைப் பார்க்க உடல் கூசியது.
80 வயதில் அடுத்த வேளை உணவுக்காக உழைக்க வந்திருக்கும் இந்தப் பாட்டி, யாரென்றே தெரியாத என்னை எப்படி நம்பினார். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் லாபத்திற்கு தானே இந்தக் கடை, இந்த உழைப்பு. ஆனாலும் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருகிறாரே என்ற எண்ணங்களுடன் நடைபோட்டேன். பணத்தை மட்டும் மதிக்காமல் மனிதர்களை மதிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பணம் பிரதானம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். மனிதர்களை நல்ல மனதையும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார் அந்த காய்கறிக்கடை பாட்டி. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சரியாக இருக்க வேண்டும் என்று யோசிக்காமல் நாம் முதலில் சரியாக இருப்போம் என்று எண்ணிக்கொண்டே ரயிலில் ஏறினேன். ரயிலில் இருந்த கூட்டம் கூட அன்று ரம்மியமாக இருந்தது.
அடுத்த நம்பிக்கை என் பக்கத்து வீட்டு ராஜி அக்கா விதைத்தது. அலுவலகம் முடித்து வீட்டிற்குச் செல்லும் போது திருமண பத்திரிக்கை ஒன்று மேசையின் மீது இருந்தது. பத்திரிகையை திறந்து, திவ்யா D/O Raji என மணமகளின் பெயரையும், படிப்பையும், மணமகள் வேலை செய்யும் நிறுவனத்தின் பார்க்கும் போதே உதட்டில் சிரிப்பு படர்ந்தது. ஐந்து மாத கர்ப்பத்தில் தன் கணவரின் வீட்டில் இருந்து வெளியேறி, 20 வயதில் சிங்கிள் மதராக வாழ்க்கையைத் தொடங்கினாள் ராஜி அக்கா. மறுமணம் குறித்து பேசும்போதெல்லாம் கடந்த காலத்தை விட்டு வெளியே வர முடியல. குழந்தையின் எதிர்காலம் பற்றி யோசிக்கணும் என்பதே பதிலாக வரும். 17 வயதில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு தயாரானவள் ராஜி அக்கா. திருமணத்திற்கு முதல் நாள் சகோதரி அவளின் காதலனுடன் சென்றுவிட, வேறு வழியில்லாமல் அதே மாப்பிள்ளையுடன் ராஜி அக்காவிற்கு திருமணம் நடந்தது.
'ஓடிப்போன அக்காவ பழி வாங்கத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றாரு. அடிக்கிறாரு' னு புலம்பியவள் 20 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள். மகளுக்காக தன் வாழ்க்கையை நகர்த்தியவள், தொலைதூரக் கல்வி மூலம் மீண்டும் படிப்பை தொடர்ந்தாள். 21 வயதில் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, அரசாங்க வேலை சாத்தியமாக்கினாள். ஆனாலும், எந்த விசேஷ வீடுகளுக்கு அவள் வருவது கிடையாது. தன் தம்பியின் திருமணத்திலேயே ஓரமாகத் தான் இருந்தாள். பல போராட்டங்கள் அவமானங்களுக்குப் பிறகு மகளை படிக்க வைத்து, ஒரு தனியார் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும் மணப்பெண்ணாக மேடையேற்றியிருக்கிறாள். மேடைக்கு அருகில் அவள் ஆனந்தக் கண்ணீர் விட்ட அந்த நிமிடம் எல்லா முடிவுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது என்று தோன்றியது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அது. நீண்ட வரிசைக்கு பிறகு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் கிடைத்தது. மனது முழுக்க திருப்தியுடன் ஏதோ சாதனை படைத்த மனநிலையில் கோயிலை விட்டு வெளியே வந்தேன். கோயிலின் வாசலில் ஆதரவற்றவர்கள் பலர் உணவுக்கு கை நீட்டினார்கள். யாரையும் கண்டு கொள்ளாமல் வெளியே வந்து காலணியை தேடிக்கொண்டு இருந்தேன். ஒரு பெண் ஆட்டோவில் இருந்து இறங்கி எல்லாருக்கும் உணவுப் பொட்டலம் கொடுத்துவிட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறினார். 'கோவிலுக்குள்ள போகலையாமா?' என்று அங்கு இருந்தவர்கள் கேட்க, 'உள்ள எனக்கு என்ன நிம்மதி கிடைக்குமோ அது இப்பவே கிடைச்சிருச்சு' என சிரித்துக் கொண்டே சொன்னார். அது மனதை ஏதோ செய்தது. கையில் இருந்த 100 ரூபாய்க்கு சாப்பாடு வாங்கி போகும் வழியில் ஒரு பெண்ணுக்கு கொடுத்தேன். அவளின் சிரிப்பை பார்க்கும் போது, கூட்டத்தில் நின்று கடவுளைப் பார்த்ததைவிட கூடுதலான திருப்தி கிடைத்தது. அன்றிலிருந்து மனிதர்களின் சிரிப்பில் கடவுளைப் பார்க்க கற்றுக்கொண்டேன்.
அவசர வேலைகளுக்கு மத்தியிலும், 'ஸ்டாண்டை எடுத்துட்டு வண்டி ஓட்டுப்பா' என்று கத்திய அந்த முகம் தெரியாத குரல், முகம் சுழிக்காமல் குப்பைகளை அள்ளும் மகேஸ்வரி அக்கா, தோல்வியையும் சிரித்துக்கொண்டே கடக்க கற்றுக்கொடுத்த கிரிக்கெட் வீரர்கள், கூடுதல் காசு கேட்காமல் இரவு 11 மணிக்கு ஓலா ஆட்டோ ஓட்டிய ஆட்டக்காரர், மழை நாள்களில் பள்ளி விடுமுறை விட்டதும் எல்லாவற்றையும் மறந்து கத்திய குழந்தைகளின் சந்தோசம், ரயில் பயணத்தின் போது தான் எழுந்து இன்னொரு பெண்ணுக்கு உட்கார இடம் கொடுத்த அந்த பெயர் தெரியாத ஆண் என 5,25,600 நிமிடங்களும் இனிமையாகத் தான் கடந்திருக்கிறது.
இன்பமோ, துன்பமோ கற்றுக்கொள்ள ஏதோ ஒரு பாடம் இருக்கத்தான் செய்கிறது. பார்க்கும் பார்வையை மாற்றி சின்னச்சின்ன நிகழ்வுகளையும் கவனிக்கத் தொடங்கினால் நிச்சயம் பூமி நமக்காக, உங்களுக்காகவும் சுழலும்.
எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?
ஆரவாரத்துடன் வரவேற்போம்
புத்தாண்டை அல்ல...
ஒவ்வொரு புது நிமிடத்தையும்!