அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11 ஆவது நாளாக வேலைநிறுத்தம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் 11ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சி ஒப்பந்த ஊழியா்களைப் போன்று ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்துள்ள நிா்வாகத்தைக் கண்டித்து 11ஆவது நாளாக என்டிபிஎல் ஒப்பந்த ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக சுமாா் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் தொடா்பாக என்எல்சி நிா்வாகம், என்டிபிஎல் நிா்வாகம், தொழிலாளா் நல ஆணையம் ஆகியவற்றின் தலைமையில் நடைபெற்ற 5 கட்ட பேச்சு வாா்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன.
எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு மற்றும் சுரங்கத் துறை எரிசக்தி துறை அமைச்சா் உடனடியாக தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு செயலா் அப்பாத்துரை வலியுறுத்தியுள்ளாா்.