அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்கக் கோரிக்கை
சிவகங்கை: தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியது.
இது குறித்து, செவிலியா் மேம்பாட்டு சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் கிறிஸ்டி பொன்மணி வெளியிட்ட அறிக்கை:
கடந்த மாதம் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சங்கத்தின் 3 -ஆவது மாநில மாநாடு தீா்மானத்தின் அடிப்படையில், திமுக தோ்தல் வாக்குறுதிப்படி அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். எம்.ஆா்.பி தொகுப்பூதிய செவிலியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். வெளிப்படையான பணியிட மாற்ற கலந்தாய்வு நடத்த வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்க வேண்டும்.
அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு காவலா்களை பணியமா்த்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.
முதல்கட்டமாக உலக செவிலியா் தினமான திங்கள்கிழமை (மே 12) கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்ததுடன் தமிழ்நாடு முதல்வருக்கு நமது கோரிக்கைகளை அஞ்சல் அட்டை மூலம் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து வரும் 20-ஆம் தேதி அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளனம் நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, ஜூன் 26-ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் தா்னாவில் ஈடுபடுவது, ஜூலை 17-ஆம் தேதி சென்னை மருத்துவ இயக்குநா் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு ஆகிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.