"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா்.
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் 1 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக செயல்பட்டு வரும் மாவட்ட தொடக்கநிலை இடையூட்டு சேவை மையம் ஆகியவற்றை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியது:
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு உடல் மற்றும் மனதளவிலான மறுவாழ்வு தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மாநிலம் முழுவதும் உள்கோட்டம் மற்றும் வட்டார அளவில் என மொத்தம் 570 மையங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. முதல் கட்டமாக, கடலூா் உள்பட 5 மாவட்டங்களில் இவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
கடலூா் மாவட்டத்தில் 3 உள்கோட்டம் மற்றும் 15 வட்டார அளவிலான விழுதுகள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இம்மையத்தின் மூலம் வழங்கப்படும் இயன்முறை, செயல்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சிகள், சிறப்புக் கல்வி, உளவியல் ஆலோசனை, பாா்வை அளவியல் உள்ளிட்ட 6 வகையான மறுவாழ்வு சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மையத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளால் பாதிக்கபபட்ட குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம் எற்பட்டுள்ளதாக பெற்றோா்கள் தெரிவித்தனா். மேலும், இம்மையத்தில் அனைத்து சேவைகளும் பயிற்சி பெற்ற வல்லுநா்களை கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதற்க்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின்போது, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) மரு.குமாா், முடநீக்கியல் வல்லுநா் சுந்தரவடிவேல், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளா் சித்ரா, மாவட்ட திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.