டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்...
அபராதம் செலுத்த தவறினால் மொட்டை; இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாக் நீரிணைப்பில் உள்ள பாரம்பர்ய மீன்பிடிப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடித்து வருகிறது.
மேலும் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் படகுகளையும் இலங்கை அரசு நாட்டுடைமையாக்கி வருகிறது. இதனால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருமையில் வாடி வருகின்றனர்.
இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக சிறை பிடிக்கப்படும் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றங்கள் லட்சக்கணக்கான ரூபாயினை அபராதமாக விதித்து வருகிறது. இவற்றைக் கைவிடவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இவற்றைக் கண்டு கொள்ளாத மத்திய அரசு மீனவர் சிறைபிடிப்பை நிறுத்தவோ, அபராத தொகையினை ரத்து செய்யவோ இலங்கை அரசை வலியுறுத்தவில்லை. இதனால் கடலுக்கு மீனவர்கள் செல்லும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு படகினையும் அதில் உள்ள மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துச் செல்கிறது.
கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 9 படகுகளையும் அதில் சென்ற 61 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் பாக் நீரிணை பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர்.
அன்றாட வாழ்வாதாரத்திற்கே மீனவர்கள் கஷ்டப்படும் நிலையில் இலங்கை நீதிமன்றங்கள் விதிக்கும் லட்சக் கணக்கான ரூபாய் அபராதத்தினைச் செலுத்த முடியாமல் மீண்டும் கடன் வாங்கி மீனவர்களை மீட்க முயல்கின்றனர். இவர்களின் முயற்சிக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் முடிந்தவரை உதவி வருகிறார்.

இந்த உதவியும் முழுமையான அளவு செய்ய முடியாததால் ஆண்டுக்கணக்கில் மீனவர்கள் சிறையில் வாடும் நிலை உள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் 7 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் இந்திய மதிப்பில் ஒன்னரை லட்ச ரூபாய் கட்டினால்தான் விடுவிக்கப்படுவார்கள். இல்லையேல் தலையை மொட்டை அடித்து சிறை வைக்கப்படுவார்கள்.
இலங்கையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு குடும்ப உதவித்தொகை, படகுகளுக்கு இழப்பீடாக ரூ. 8 லட்சம் எனத் தமிழக அரசு உதவி வருகிறது.
ஆனால் கால காலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த அசைவும் இல்லை. இதையடுத்து நாட்டின் 79வது சுதந்திர தினமான இன்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர் சங்கத் தலைவர்கள் சேசுராஜ், எமரிட், எஸ்.பி.ராயப்பன், பேட்ரிக் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள், அதன் தலைவர் எம்.அர்ச்சுனன் தலையில் பங்கேற்றனர்.
மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின்னரும் பிரச்னைக்குத் தீர்வு காணவில்லை எனில் வரும் 19-ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.